உயிர் விடும் கணத்தில், அவர் தாம் இருபத்து நான்கு வருடங்கள் ஆண்ட இராக்கை வாழ்த்தியிருக்கலாம். அல்லது இறைவன் பெயரை உச்சரித்திருக்கலாம். இரண்டும் இல்லாமல், வாழ்நாளெல்லாம் பரம விரோதியாகவே கருதிய ஷியா இனத்தைச் சேர்ந்த முக்தாதா அல் சத்ர் என்ற முப்பத்து மூன்று வயது குட்டிப் போராளியின் பெயரைச் சொல்லிவிட்டு உயிரைவிட்டது விநோத மர்மம்தான். ஒரு வேளை எப்போதும் அவர் எதிரிகளை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தார் என்பதன் அடையாளம்தான் அதுவோ, என்னவோ!

ஆண்டு இறுதி என்றாலே பூகம்பம் அல்லது சுனாமி என்று சமீப வருடங்கள் அச்சமூட்டியிருக்கும் நிலையில், 2006_ன் பூகம்பமாகவும் சுனாமியாகவும் சதாம் உசேனின் மரணம் அமைந்துவிட்டது. டிசம்பர் 30_ம் தேதி சனிக்கிழமை, இந்திய நேரம் காலை எட்டரைக்கு (இராக் நேரம் காலை ஆறு மணி) பாக்தாத்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் இருக்கும் 'கேம்ப் பன்ஸாய்' (சிணீனீஜீ ஙிணீஸீக்ஷ்ணீவீ) என்கிற ராணுவ சிறைச்சாலையில் (ஒரு காலத்தில் சதாமின் ராணுவ உளவுத்துறைத் தலைமையகமாக இருந்த இடம் இது. ஆயிரக்கணக்கான ஷியாக்களும் குர்த் இனத்தவர்களும் இங்கே இழுத்துவரப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.) பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தூக்குமேடையில் சதாம் ஏறி நின்றார். முகத்தைக் கறுப்புத் துணி கொண்டு மூட அவர் சம்மதிக்கவில்லை. மரணத்தை நேருக்கு நேர் பார்ப்பதில் அவருக்குப் பிரச்னை எதுவும் இல்லை.

கவனமாக எடிட் செய்து ஒளிபரப்பப்பட்ட சதாமின் இறுதிக் கணங்கள் அடங்கிய காட்சித் தொகுப்பில், அதிகாரிகள் வருணித்ததுபோல அவரது முகத்தில் பயத்தின் சாயலெல்லாம் இல்லை. எப்போதும் போல் இறுகிய முகம். தூக்குப் போட வந்த ஊழியர்களிடம் சாதாரணமாகத்தான் பேசினார். கழுத்தில் ஏன் அந்தக் கறுப்புத்துணியைச் சுற்றிக்கொள்ளவேண்டும் என்று ஓர் ஊழியர் விளக்கியபோது, கவனமாகக் கேட்டுக்கொண்டார். பதற்றம் இல்லை, பயம் இல்லை. கண்ணீர் இல்லை, செய்தவற்றை நினைத்துக் கலங்கவோ, வருந்தவோ கூட இல்லை. அவர் சதாம். உத்தரவிட்டுத்தான் அவருக்குப் பழக்கம். உணர்ச்சிவசப்பட்டு அல்ல.

சற்றும் மனிதத்தன்மையற்ற, காட்டுமிராண்டித்தனமான, அருவருப்பூட்டக்கூடிய, தண்டனை என்கிற பெயரில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு, இராக்கியப் பெரும்பான்மையினரான ஷியாக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்கள். மிகச் சரியான தண்டனையை இராக்கிய நீதிமன்றம் வழங்கியதாக அமெரிக்க அதிபர் சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார். 'நாங்கள் மரணதண்டனைக்கு எதிரானவர்கள்தான். ஆனாலும் சதாம் விஷயத்தில், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி' என்று வழிந்திருக்கிறார் பிரிட்டனின் பிரதமர் டோனி ப்ளேர்.

அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் தவிர, பெரும்பாலான உலக நாடுகள் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தெரிவித்திருக்கின்றன. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் வரை அத்தனை பேரும் அறிக்கை மழை பொழிந்து தீர்த்துவிட்டார்கள். பட்டும் படாமலும் வருத்தம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃபையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம் என்றால், தொண்ணூற்றொன்பதே முக்கால் சதவிகித உலக நாடுகளின் எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் மரண தண்டனை இது.

என்ன செய்தார் சதாம்?

சதாம் நிறையவே செய்தார், நல்லதும் கெட்டதுமாக. ஆனால், அவர் செய்த கெட்ட காரியங்களின் வீரியம் மிக அதிகம் என்கிறபடியால், நல்லவை எதுவும் வெளியே தெரியாமல் போய்விட்டது.

மத்தியக் கிழக்கு தேசங்கள் அனைத்துமே இஸ்லாமிய நாடுகளாகத் தங்களை அறிவித்துக்கொண்டு, வெளிப்படையாக மத அடிப்படைவாத ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது, சதாம் ஒருவர்தான் இராக்கை மதச்சார்பற்ற தேசம் என்று சொல்லி, ஆட்சி புரிந்தவர். கொஞ்சநஞ்ச காலம் அல்ல. இருபத்து நான்கு ஆண்டுகள் (ஜூலை 16, 1979 முதல் ஏப்ரல் 9, 2003 வரை). கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, முதியோர் வேலை வாய்ப்புகள், சிறு வியாபாரிகளுக்கு வரித் தள்ளுபடி, நாடெங்கும் நல்ல சாலைகள், நிறைய பள்ளிகள், கல்லூரிகள், எண்ணெய்த் தொழிலை நவீனப்படுத்தியது, உற்பத்திப் பெருக்கம், சிறப்பான ஏற்றுமதிக் கொள்கைகள் என்று சதாமை நல்லவிதத்தில் நினைவுகூரப் பல விஷயங்கள் உண்டு.

ஆனால், அவர் இனவெறி மிக்கவராக இருந்தார். சன்னி முஸ்லிமான சதாமுக்கு, இராக்கின் பெரும்பான்மை சமூகத்தினரான ஷியாக்களைப் பிடிக்காது. இன்னொரு முக்கிய இனமான குர்த் மக்களை அறவே பிடிக்காது. குர்த்கள் தங்களுக்கெனத் தனிநாடு கேட்டுப் போராடத் தொடங்கியது (குர்திஸ்தான்), இராக்கிய ஷியா பெரும்பான்மையினர், இரானின் உதவியுடன் சதாமைக் கவிழ்ப்பதற்கு அந்த இருபத்து நான்கு ஆண்டுகளும் முயற்சி செய்தது ஆகியவை அவரை இனப் படுகொலை நடவடிக்கைகள் வரை இட்டுச் சென்றன.

தற்போதைய மரணதண்டனை, 1982_ல் சதாமால் செய்யப்பட்ட 148 படுகொலைகளுக்கானது. இந்த வழக்கில் ஒருவேளை சதாம் விடுபட நேர்ந்திருந்தால் கூட, அடுத்தடுத்துப் பல வழக்குகள் தயாராகக் காத்திருந்தன. அத்தனையுமே இனப்படுகொலை வழக்குகள். ஒன்று ஷியா அல்லது குர்த்.

இந்தக் குறிப்பிட்ட சம்பவம், இராக்கின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள துஜைல் என்கிற நகரில் நடைபெற்றது. ஷியாக்கள் நிறைந்தது துஜைல்.

யுத்த காலம் அது. இரானுடனான யுத்தம் தொடங்கி சூடு பிடித்திருந்தது. சதாமின் பணிகளில் அப்போது முதன்மையாக இருந்தது, மக்களை நேரில் சந்தித்துப் பேசுவது. யுத்தத்துக்கு ஆதரவு திரட்டுவது. பகல் பொழுதுகள் முழுவதையும் அவர் இதற்கே செலவிட்டுக்கொண்டிருந்தார். ராணுவத் தளபதிகளுடனான ஆலோசனைகளை இரவுகளில் வைத்துக்கொண்டார்.

இராக்கின் அத்தனை மூலைகளுக்கும் சதாம் அப்போது போய்க்கொண்டிருந்தார். ஜனநாயக தேசங்களில் தேர்தல் பிரசார சமயங்களில் கூடத் தலைவர்கள் அப்படியரு தீவிரப் பயணம் மேற்கொள்வது சிரமம்.

ஜூலை மாதம் எட்டாம் தேதி, 1982_ம் வருடம் அவர் துஜைலுக்கு வந்தார்.

'என் அன்பு மக்களே! நீங்கள் எந்த இனம், எந்தப் பிரிவு என்று பார்ப்பவனல்ல நான். நாம் அனைவரும் இராக்கியர்கள். இந்த தேசிய உணர்வு நம் அத்தனை பேரின் ரத்தத்திலும் ஊறித் திளைக்க வேண்டும். நடக்கிற யுத்தம் யாருக்காக? நமக்காக. நமது உரிமைக்காக. உங்கள் அத்தனை பேரின் பங்களிப்பையும் நான் இதில் எதிர்பார்க்கிறேன்.'

உருக்கமான பேச்சு. அழகான பேச்சு. கூட்டத்தை முடித்துக்கொண்டு அதிபரின் கார் புறப்பட்டது.

அப்போதுதான் அது நடந்தது. சடாரென்று அதிபரின் வாகன அணிவகுப்பு சென்றுகொண்டிருந்த சாலையில், ஆறு ஷியா இளைஞர்கள் குதித்தார்கள். ஆயுததாரிகள். சற்றும் தாமதிக்காமல் சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள்.

சதாம் சடாரென்று தானிருந்த வாகனத்தின் சீட்டுக்கு அடியில் படுத்துக்கொண்டார். பாக்தாத் திரும்பும் வழியிலேயே தன் செக்யூரிடி ஆபீஸருக்குக் கண்ணைக் காண்பித்துவிட்டார். துஜைல் நகரத்து ஷியாக்கள் ஒருவர் கூட உயிருடன் இருக்கக் கூடாது. அல்லது துஜைல் நகரமே இருக்கக் கூடாது.

அது நடந்தது. அந்த ஊர் அப்படியே ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. கண்ணில் பட்ட ஷியாக்கள் அத்தனை பேரையும் (148) சுட்டுக்கொன்றார்கள். கடைகள் சூறையாடப்பட்டன. வீடுகள் கொளுத்தப்பட்டன. பதின்மூன்று வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் இரக்கமே இல்லாமல் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்கள். சுமார் 1500 பெண்களும் வயோதிகர்களும் சித்திரவதை செய்யப்பட்டு விரட்டப்பட்டார்கள்.

இதெல்லாம் போதாதென்று துஜைல்வாசிகளின் விளைநிலங்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன. மிஞ்சி இருந்தவர்கள் அச்சமுடன் தான் அவ்வப்போது வெளியே வந்தார்கள். பெரும்பாலும் பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருந்தார்கள்.

சிலகாலம் கழித்து துஜைல் மீண்டும் சீரமைக்கப்பட்டுவிட்டது என்றாலும், சமநிலை குலைந்துபோன அந்த மக்கள், அந்த ஊரில் வசிக்கவே விரும்பவில்லை.

சரியாக இருபத்து நான்கு வருடங்கள். அதே துஜைல் படுகொலைகளுக்காகத்தான் சதாமுக்கு இன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. துஜைல்வாசிகள் ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். 'கொஞ்சம் தாமதம்தான். ஆனாலும் சரியான தீர்ப்பு' என்று சப் டைட்டிலுடன் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடா வளர்த்தவர்கள்:

சதாம் ஒரு பிறவி சர்வாதிகாரி. இதில் சந்தேகமே இல்லை. முன்னாள் சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் ஜோசஃப் ஸ்டாலின்தான் அவருக்கு ஆதர்ச புருஷர்.

1959_ல் இராக்கை ஆண்டுகொண்டிருந்த அப்துல் கரீம் காசிம் என்கிற இடதுசாரி அனுதாபியை ஒழித்துக்கட்டுவதன் பொருட்டு, அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. நிகழ்த்திய ஒரு கொலை முயற்சியில் பங்குபெற்றதுதான், சதாமின் அரசியல் தொடக்கம் எனலாம். கொலை முயற்சி தோற்ற பிறகு, சி.ஐ.ஏ.வே அவரைப் பாதுகாப்பாக எகிப்துக்கு அழைத்துப் போய் தங்கவைத்து, பணம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, சாப்பாடு போட்டு, தனது இராக்கிய வாரிசாக ஆக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சந்தேகமில்லாமல் சதாம் ஓர் அமெரிக்கத் தயாரிப்பு. எண்பதுகளின் தொடக்கத்தில் ஆரம்பித்து சுமார் எட்டாண்டு காலம் நீடித்த இரான் + இராக் யுத்தம் முடிவடையும் வரை அவரை ஆதரித்து, போஷித்து, வளர்த்ததெல்லாம் அமெரிக்காதான். யுத்தம் முடிந்தபோது இரண்டு தரப்புக்கும் வெற்றி, தோல்வி இல்லாமல்தான் இருந்தது. நிறைய இழப்புகள், சேதாரங்கள். ஆனாலும் சதாம் தான் வெற்றி பெற்றதாகவே அறிவித்துக்கொண்டார். அதனாலென்ன? இரானின் அதிபர் அயாதுல்லா கொமேனியை ஒழித்துக்கட்ட அமெரிக்கா தீட்டிய திட்டத்துக்கு எட்டு வருடங்கள் உயிரைக் கொடுத்து உதவியிருக்கிறார் அல்லவா?

ஆகவே, சதாமைப் பாராட்டி அப்போது அமெரிக்கா மிகப்பெரிய தொகை ஒன்றை அவருக்கு அன்பளிப்பாக அளித்தது. சுமார் 65 முதல் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அப்படி பில்லியன் கணக்கில் கொட்டிக்கொடுத்து, தட்டிக்கொடுத்து வளர்த்த அமெரிக்காதான் பிறகு, முறைத்துக்கொண்டு குவைத்தில் மல்லுக்கு நின்றது. குவைத்தில் குடித்துக்கொண்டிருக்கும் எண்ணெய்க்கும் சதாமால் ஆபத்து வந்துவிடப் போகிறதே என்றுதான் அந்த யுத்த சமயத்தில் சட்டென்று சதாமுக்கு எதிராக நின்றது அமெரிக்கா. அன்று தொடங்கிய பகைதான் அது. முதலில் சொற்களாலும் பிறகு ஸ்கட் ஏவுகணைகளாலும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

வளைகுடா யுத்தம்:

குவைத்தை இராக் ஆக்கிரமித்ததற்குப் பதிலடியாக ஜனவரி 12, 1991_ம் ஆண்டு இராக் மீது படையெடுக்க அமெரிக்கா முடிவு செய்தது. 'பாலைப்புயல்' என்று தாக்குதலுக்குப் பெயர் வைத்தார்கள். படு உக்கிரமான யுத்தம். ஒட்டுமொத்த அரேபிய தேசங்களும் குவைத்தை அடுத்து எங்கே சதாம் தங்களைத் தாக்க வருவாரோ என்கிற பயத்தின் காரணமாக, அமெரிக்காவின் பின்னால் அணி திரண்டு நின்றன. ஆச்சர்யம், அமெரிக்காவின் தோழமை தேசமான இஸ்ரேல் மட்டும் இந்தப் போரில் நடுநிலை காப்பதாக அறிவித்துவிட்டு, சமர்த்தாக நின்று வேடிக்கை பார்த்தது. சொந்தச் சகோதரர்களைக் கொண்டே சதாமை ஒழிப்பதுதான் அமெரிக்காவின் திட்டம். இதற்கு பிரிட்டன் ஒத்துழைத்தது பெரிய விஷயமல்ல. அரபு தேசங்கள் அனைத்தும் சம்மதித்து அணி திரண்டதைத்தான் சதாமால் ஜீரணிக்க முடியவில்லை. அவரது முரட்டுத்தனத்தையும் துவேஷ உணர்வையும் அதிகப்படுத்திய சம்பவம் அது.

அதனால்தான் அவர் குவைத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்குத் தீவைக்க உத்தரவிட்டார். அதை உலகமே டி.வி.யில் வேடிக்கை பார்த்தது. எப்படியும் தோல்விதான் என்று தெரிந்ததும் இராக்கிய வீரர்களின் பேயாட்டம் உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி 26_ம் தேதி போர் நின்றபோது, குவைத்தும் சவூதி அரேபியாவும் இராக்கும் ஏராளமாக இழந்திருந்தன. எங்கும் தீ. மரண ஓலம். குவைத் விடுவிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

ஆனால் இராக்கை யார் விடுவிப்பது?

தடைகள் பலவிதம்:

வளைகுடாப் போரின் முக்கிய விளைவுகளுள் ஒன்று, இராக் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள். மக்கள் அப்போது அரிசி முதல் அண்டர்வேர் வரை அனைத்துக்கும் லாட்டரி அடித்துக்கொண்டிருந்தார்கள் அங்கே. இராக்கின் வெளிதேச வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன. வர்த்தகம் தடை செய்யப்பட்டிருந்தது. உற்பத்தியும் கணிசமாக பாதிக்கப்பட்டிருந்த காலமாதலால், மிகவும் அவலமான சூழ்நிலை உருவாகியிருந்தது.

மனிதாபிமான அடிப்படையில் இராக் மக்களுக்கு உதவுவதற்காக ஐ.நா. ஒரு திட்டத்தை முன்வைத்தது. உணவுக்கு எண்ணெய் (ளிவீறீ யீஷீக்ஷீ திஷீஷீபீ றிக்ஷீஷீரீக்ஷீணீனீ). நட்வர்சிங் வரை பதம் பார்த்த இந்தத் திட்டத்தின் ஊழல் ஆழங்கள், இப்போது உலகப்புகழ் பெற்றுவிட்டன.

உண்மையில் அமெரிக்காவின் நோக்கம், சதாமின் ஊழல்களை வெளிப்படுத்துவதோ, அவருக்கு தர்மசங்கடம் அளிப்பதோ அல்ல. சதாமை ஒழிப்பது அல்லது அழிப்பது. இராக்கில் ரசாயன உயிர்க்கொல்லி ஆயுதங்கள் இருக்கின்றன, உயிரியல் ஆயுதங்கள் இருக்கின்றன, அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகள் அங்கே நடக்கின்றன என்று, அடுத்தடுத்து எதையாவது சொல்லிக்கொண்டே இருந்து ஆய்வுக்கு, அறிக்கைக்கு என்று குழு அனுப்பி அனுப்பி போரடித்தபோதுதான், நேரடி யுத்தத்துக்கு ஆயத்தம் செய்ய ஆரம்பித்தார் ஜார்ஜ் புஷ்.

மத்தியக் கிழக்கைப் பொறுத்தவரை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஒன்றுதான். எப்போதும் எண்ணெய் வர்த்தகம் தனக்குச் சாதகமாகவே நடக்கவேண்டும். அவ்வளவுதான். நேற்றைக்கு சதாமுக்குத் தூக்கு தண்டனை விதித்ததும் அதனால்தான். இன்றைக்கு இரானுக்கு அச்சுறுத்தல் விட்டுக்கொண்டிருப்பதும் அதனால்தான். எல்லா தேசங்களும் சவூதி அரேபியாவைப் போல, குவைத்தைப் போல அமெரிக்காவின் நட்பு நாடுகளாக எண்ணெய்க் கப்பம் கட்டிக்கொண்டிருந்துவிட்டால் பிரச்னையே இல்லை. முறைத்துக் கொண்டு நின்றதனால்தான் சதாம் தாக்கப்பட்டார், நீக்கப்பட்டார், உயிர் போக்கப்பட்டார்.

செப்டெம்பர் 11, 2001_ அல் காயிதா தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா அறிவித்த 'உலகு தழுவிய பயங்கரவாத ஒழிப்பு' நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான், இராக் மீது 2003 மார்ச் 20_ம் தேதி அமெரிக்கா போர் தொடுத்தது. மூன்றே வாரங்களில் முடிவுக்கு வந்துவிட்ட யுத்தம். அந்த வருடம் தொடங்கி இன்றுவரை இராக்கில் வெடித்த குண்டுகளுக்கும் விழுந்த தலைகளுக்கும் கணக்கே இல்லை. டிசம்பர் 12, 2003 அன்று சதாம் ஒரு பதுங்கு குழிக்குள்ளிருந்து செத்த எலிபோல் பிடிபட்டு அழைத்துவரப்பட்டு, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக முகம் மறைத்த தாடியுடன் காட்டப்பட்ட பிறகு, இந்தக் குண்டுவெடிப்புகளும் மரணங்களும் இன்னும் அதிகரித்தன.

சதாம் கைதான சமயம், அதற்காக வருத்தப்பட்டவர்கள் குறைவு. ஆனால், அவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை அதற்கு முற்றிலும் மாறான மக்கள் மனோபாவத்தையே வெளிக்காட்டியிருக்கிறது.

'சதாம் குற்றவாளியாக இருக்கலாம். ஆனால், தண்டிக்க அமெரிக்கா யார்?'

இனி என்ன?

ஒரு வருடம் நடந்த விசாரணை வைபவங்கள். இடையில் பலமுறை நீதிபதிகள் மாறினார்கள். வழக்கறிஞர்கள் கடத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். சதாம், நீதி மன்றத்தில் நிறைய கெட்டவார்த்தைகள் உதிர்த்தார். கண்துடைப்பு விசாரணை என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஏகப்பட்ட களேபரத்துக்குப் பிறகு, கடந்த நவம்பர் 5_ம் தேதி துஜைல் படுகொலைகளுக்காக சதாமுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி ரவூஃப் அப்துல் ரகுமான். இவர் குர்த் இனத்தைச் சேர்ந்தவர். (மிக கவனமாக ஷியா பிரிவு நீதிபதி தவிர்க்கப்பட்டார்.)

சதாம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீடு செய்யப்பட்ட தினம் தொடங்கி, ஒரு மாதத்தில் தீர்ப்பு வரவேண்டுமென்பது அங்கே விதி. ஆகவே வந்துவிட்டது.

உண்மையில் சதாமின் மரணதண்டனை இத்தனை அவசரமாக, முன்னறிவிப்பு ஏதுமின்றி, திடீரென்று பக்ரீத் தினத்தையட்டி நிறைவேற்றப்படவேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி அனைவருக்குமே எழுந்தது.

இரண்டு காரணங்கள். ஒரு பண்டிகை தினத்தன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுவது, எழுப்பக்கூடிய அதிர்ச்சி மற்றும் அச்ச அலைகள் நீடித்து இருக்கும். நினைவை விட்டு அகலாது. பிற மத்தியக் கிழக்கு தேசங்களிடத்தில் அமெரிக்கா எதிர்பார்ப்பது அதனைத்தான். பயந்திரு. பணிந்திரு.

இரண்டாவது காரணம், இராக்கிய ஷியாக்களுக்கு ஒரு புத்தாண்டுப் பரிசு வழங்குவதுபோலவும் இருக்கும். 2007 தொடங்கி அங்கே நிறையப் புதிய எண்ணெய் ஒப்பந்தங்கள் செய்யலாம். இராக்கின் வர்த்தகத் துறையையே தன் இஷ்டத்துக்கு வளைத்து ஆளலாம். தவிரவும் அங்கே ஒரு நிரந்தரமான ராணுவத் தளத்தை அமைத்துக்கொண்டு, அடுத்த வருஷ வேட்டைக்கு இரானைக் குறிவைக்கலாம்.

இதைத்தவிர, வேறு பிரமாதமான காரணங்கள் ஏதுமில்லை.

ஆனால், ஒன்றை மறந்துவிட்டார்கள். சதாம் உசேனின் மரணம், இராக்கிய சன்னி சிறுபான்மையினரையும் ஒட்டுமொத்த இஸ்லாமியப் போராளி இயக்கங்களையும் அவசியம் உசுப்பியே தீரும். ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராகக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் அல் காயிதா, ஹமாஸ், ஜமா இஸ்லாமியா போன்ற இயக்கங்கள் கண்டிப்பாக பதிலடி தர ஆயத்தம் செய்யும். இராக்கிய சன்னி இயக்கங்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. போதாக்குறைக்கு ஆப்கனில் அமெரிக்காவால் அழிக்கப்பட்டு, காட்டுக்குள் இப்போது பதுங்கி வாழும் தாலிபன்கள், முதல் தகவல் அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள். 'கண்டிப்பாக பதில் சொல்வோம். எங்கள் மொழியில்.'

தாலிபன் சொல்கிறதென்றால், அல் காயிதா அங்கீகரிக்கிறது என்று அர்த்தம். என்னதான், ஒசாமா பின்லேடனுக்கு சதாமுடன் நெருக்கமான தொடர்புகள் ஏதும் கிடையாது, சதாமின் அரசியலில் அவருக்கு உடன்பாடு கிடையாது (சதாம் மதச்சார்பின்மைவாதி. ஒசாமா எதிர்வாதி அல்லவா?) என்றாலும், இராக்கின் உள் விவகாரத்தில் அமெரிக்கா அத்துமீறியிருப்பதை அல் காயிதா கண்டிப்பாக ஒப்புக்கொள்ளாது. சவூதி அரேபியாவுக்குள் அமெரிக்கப் படைகள் வந்ததை எதிர்த்துத்தானே அவர் தம் தாய்நாட்டையே பகைத்துக்கொண்டு வெளியேறினார்?

இது ஒருபுறமிருக்க, வளைகுடா யுத்த சமயம் ஒட்டுமொத்த அரபு தேசங்களும் இராக்குக்கு எதிரணியில் திரண்டிருந்தபோதிலும், யாசிர் அராஃபத்தின் பி.எல்.ஓ. மட்டும் சதாம் உசேனை ஆதரித்தது நினைவிருக்கிறதா? பாக்தாத்துக்கே சென்று சதாமுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்துவிட்டு வந்தார் அராஃபத். பாலஸ்தீனில் இப்போது ஹமாஸ் ஆளும் கட்சியாகவும் பி.எல்.ஓ. எதிர் இயக்கமாகவும் இருக்கிற சூழலில், கண்டிப்பாக பி.எல்.ஓ.வின் உறுப்பு இயக்கங்கள் சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராகக் களமிறங்க நினைக்கும்.

இராக்கில் மட்டுமல்லாமல், அமெரிக்கா கால் ஊன்றியிருக்கும் அத்தனை மத்தியக் கிழக்கு தேசங்களிலுமே, அடுத்து வரும் நாட்களில் வன்முறைக்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகத் தெரிகின்றன. ஷியாக்கள் தாக்கப்படலாம். இஸ்ரேலில் தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம். தாக்குதலுக்குப் பதில், பதிலுக்குப் பதில் என்று நிலைமை மேலும் மோசமாகக்கூடிய சாத்தியங்களே அதிகம்.

இராக்கிய பிரதமர் நூரி அல் மாலிக்கி, 'சதாம் இறந்துவிட்டார். இனி இராக், இராக்கியர்களுடையது. அவருடைய சகாப்தம் முடிந்துவிட்டது. நாம் வளர்ச்சிப்பாதையில் இனி நடப்போம்' என்று எழுதிவைத்து, அறிக்கை வாசித்தாலும் ஒன்று மட்டும் உறுதி.

கண்டிப்பாக புத்தாண்டில் அங்கே அமைதி கிடையாது.

பா. ராகவன்
(Kumudam Reporter)